தெலுங்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
ஐதராபாத்: முதல்முறையாக விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தெலுங்கு படத்துக்கான தொடக்க விழா ஐதராபாத்தில் நடந்தது. இதற்கு முன்பு அவர்கள், ‘மகாநடி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தனர் என்றாலும், ஜோடியாக நடிக்கவில்லை. நாக் அஸ்வின் இயக்கிய இப்படத்தில், மறைந்த நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்நிலையில், ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை என்றும், மலையாள இசை அமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இசை அமைக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ, சிரிஷ் தயாரிக்கின்றனர். தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்கள் எப்போதுதான் திரைக்கு வரும் என்று தெரியவில்லை.