கிஸ் விமர்சனம்
காதல் திருமணம் செய்த ராவ் ரமேஷ், தேவயானி தம்பதியின் மூத்த மகன் கவினுக்கு காதல் என்றாலே பிடிக்காது. இந்நிலையில், பிரீத்தி அஸ்ரானியால் அவருக்கு கிடைக்கும் அமானுஷ்ய புத்தகத்தின் மூலமாக திடீர் சக்தி கிடைக்கிறது. காதலர்கள் முத்தமிடுவதை பார்த்தால், அவர்களின் எதிர்காலம் கவினுக்கு தெரியவரும். அந்த சக்தியை பயன்படுத்தி காதலர்களை பிரிக்கும் கவின், தனக்கு நடனம் சொல்லித்தரும் பிரீத்தி அஸ்ரானியை காதலிக்கிறார். அப்போது அவருக்கு பிரீத்தி அஸ்ரானி திடீர் முத்தம்ஒன்றை பரிசளிக்கிறார். இதுவே அவர்களின் காதலை பிரிக்கும் சக்தியாக மாறுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
பேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானர் என்பதால், லாஜிக் பற்றி கவலைப்படாமல், இளமை துள்ளலுடன் காதல் பொங்கி வழியும் கதையை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கியுள்ளார். கவின், பிரீத்தி அஸ்ரானி யின் காதல் காட்சிகள் இளசுகளுக்கு சுவாரஸ்யம். அவர்களின் கிஸ்சிங் சீன் கூடுதல் போனஸாகும். விடிவி கணேஷ், அவரது மகன் ஆர்ஜே விஜய் காமெடி, படத்தை கலகலப்பாக நகர்த்துகிறது. ராவ் ரமேஷ், தேவயானி தம்பதிக்கு நடுவே ராவ் ரமேஷின் முன்னாள் காதலி கவுசல்யா வர, அவரை தவறாக புரிந்துகொண்ட கவின் வெறுப்பதும், கவுசல்யாவின் நிலை தெரிந்த பிறகு அவரை நேசிப்பதும் கிளைக்கதை. பிரபு, டான்ஸ் மாஸ்டர் கல்யாண் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக அமைந்திருக்கிறது. ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் காதலை குழைத்து தந்துள்ளார். படத்தின் முற்பகுதி சோதித்தாலும், பிற்பகுதி சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. ஆனால், உணர்ச்சிகரமான காட்சிகள் ஜஸ்ட் லைக் தட் ஆக கடந்து சென்றுவிடுவது ஏமாற்றத்தை தருகிறது. திரைக்கதை மற்றும் கேரக்டர்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இயக்குனர் டான்ஸ் மாஸ்டர் என்பதால், நடன காட்சிகள் நச்சென்று இருக்கிறது. காட்சிகளும் அதுபோல் இருந்திருக்கலாம்.