‘பரியேறும் பெருமாள்’ ரீமேக்கில் முத்தக்காட்சி
கடந்த 2018ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ‘கயல்’ ஆனந்தி நடிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் இந்தி ரீமேக், ‘தடக் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. முன்னதாக ‘சைராட்’ என்ற மராத்திய படத்தை தழுவி ‘தடக் 1’ படம் உருவாக்கப்பட்டது. தற்போது ‘தடக் 2’ படத்தின் டிரைலர் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் இதையும் தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் சித்தாந்த் சதுர்வேதி, திரிப்தி டிம்ரி நடித்துள்ளனர்.
தமிழில் ஹீரோ, ஹீரோயினுக்கான நட்பை மாரி செல்வராஜ் யதார்த்தமாகச் சொல்லியிருப்பார். ஆனால், ‘தடக் 2’ படத்தில் ஹீரோ, ஹீரோயின் காதலிப்பதை வெளிப்படையாகச் சொல்ல, டிரைலரில் முத்தக்காட்சியை இடம்பெற வைத்தது ரசிகர்களை அதிர வைத்துள்ளது. இப்படம் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ரீமேக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பாலிவுட் ரசிகர்களுக்காக இக்கதையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.