ஒரிஜினலாக சண்டை போட்ட ஹீரோயின்
சமூகத்தின் அனைத்து தடைகளையும் கடந்து, ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று கருத்துடன் உருவாகியுள்ள படம், ‘பரிசு’. கதையின் நாயகியாக நடித்துள்ள ஜான்விகா, சண்டைக் காட்சிகளில் ‘டூப்’ இல்லாமல் ஒரிஜினலாக நடித்துள்ளார். மற்றும் ஜெய் பாலா, கிரண் பிரதீப், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, சென்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னபொண்ணு, பேய் கிருஷ்ணன் நடித்துள்ளனர். திரைப்பட கல்லூரியில் பயின்ற கலா அல்லூரி எழுதி இயக்கி, ஸ்ரீகலா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். சங்கர் செல்வராஜ் ஔிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ராஜீஷ் இசை அமைத்துள்ளார்.
கே.ராஜேந்திர சோழன் பாடல்கள் எழுத, சி.வி.ஹமரா பின்னணி இசை அமைத்துள்ளார். தனியார் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு பிரத்தியேகமாக திரையிடப்பட்ட இப்படம் குறித்து ஜான்விகா கூறுகையில், ‘பெற்றோருக்கு மிகவும் பிடித்த மகளாக, கல்லூரி மாணவியாக, விவசாயம் செய்யும் பெண்ணாக, தந்தையிடம் ஊக்கம் பெறும் மகளாக, துப்பாக்கி சுமக்கும் ராணுவ வீராங்கனையாக நடித்துள்ளேன். இது பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பார்க்க வேண்டிய படம். வரும் 31ம் தேதி திரைக்கு வருகிறது’ என்றார்.
