தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஸ்ரீலீலா

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎப்’ படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் ‘சலார்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் புவன் கவுடா. இந்த படங்களின் வெற்றிக்கு இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு அடுத்தபடியாக அதன் ஒளிப்பதிவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது ஜூனியர் என்டிஆரை வைத்து பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்திற்கும் புவன் கவுடா தான் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் புவன் கவுடாவுக்கும் நிகிதா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதில் இயக்குனர் பிரசாந்த் நீல் தனது மனைவி லிகிதாவுடன் கலந்து கொண்டார். மேலும் நடிகை ஸ்ரீ லீலாவும் இதில் கலந்துகொண்டு தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஸ்ரீலீலா தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

புவன் கவுடா தெலுங்கில் ‘சலார்’ என்ற ஒரு படத்தில் மட்டுமே பணியாற்றியுள்ளார். அந்த படத்திலும் ஸ்ரீ லீலா நடித்திராத நிலையில் அவர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கி வரும் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி என்றால் ஸ்ரீலீலா வேறு ஏதேனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா அல்லது ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுகிறாரா என்ற கேள்வி நெட்டிசன்கள் இடையே தோன்றியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.