தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கிரித்தி ஷெட்டியின் முதல் பட வாய்ப்பு

தனது இளமையாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் கிரித்தி ஷெட்டி. இவர் கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘உப்பெனா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு நானியுடன் ‘ஷியாம் சிங்கா ராய்’, நாக சைதன்யா ஜோடியாக ‘பங்கராஜு’ ராம் பொத்தினேனியுடன் ‘தி வாரியர்’, மீண்டும் நாக சைதன்யாவுடன் ‘கஸ்டடி’, மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக ‘ஏஆர்எம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது தமிழில், பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, கார்த்தி ஜோடியாக ‘வா வாத்தியார்’, ரவி மோகனுடன் ‘ஜீனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இந்நிலையில், கிரித்தி ஷெட்டி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது முதல் பட வாய்ப்பு குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் பேசும்போது, ”நான் ஒரு விளம்பர படத்தின் ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். அது முடிந்ததும் என்னை அழைத்து செல்ல என் அப்பா வர கொஞ்சம் தாமதமானது. அப்போது அருகில் ஒரு ஸ்டுடியோ இருப்பதை பார்த்து அங்கே காத்திருந்தேன். அந்த ஸ்டுடியோவில் ஒரு படத்திற்கான ஆடிஷன் நடப்பதை அறிந்தேன். அவர்கள் என்னை பார்த்ததும், ”உங்களுக்கு நடிக்க ஆர்வம் உள்ளதா?” என்று கேட்டார்கள். நான் என் அம்மாவின் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். பிறகு இரண்டு நாட்கள் கழித்து இயக்குனர் புச்சி பாபு எனக்கு கால் செய்து பட வாய்ப்பு கொடுத்தார். இப்படித்தான் ‘உப்பெனா’ பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்.