தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கும்கி 2 விமர்சனம்...

மலை கிராமத்தில் சாராயம் காய்ச்சுபவர், சூசன் ஜார்ஜ். அவரது மகன் மதி, தனது சிறுவயதில், குழிக்குள் விழுந்த ஒரு யானை குட்டியை காப்பாற்றுகிறார். இதனால் அந்த யானை அவரை நம்பி, அவரது வாழ்க்கையில் அன்பையும், ஆறுதலையும் தருகிறது. யானை வளர்ந்த பின்பு, அதற்கு பல லட்சங்களில் விலை பேசப்படுவதை அறிந்த சூசன் ஜார்ஜ், அதை மதிக்கு தெரியாமல் விற்றுவிடுகிறார். அந்த யானை, காட்டு யானைகளை துரத்த பயன்படுத்தப்படும் கும்கி யானையாக பயிற்சி பெற்று சத்யாவிடம் இருக்கிறது.

நிலா, குக்கூ என்று பெயரிடப்பட்ட தனது அன்புக்குரிய யானையை தேடி செல்லும் மதி, அதை கண்டுபிடித்து தன்னுடன் அழைத்து செல்கிறார். இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர் ‘கயல்’ பெரேரா, சாமியாரின் ஆலோசனைப்படி யானையை பலி கொடுக்க ஏற்பாடு செய்கிறார். அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் அந்த ரகசியத்தை அறிந்த மதி, யானையை காப்பாற்றினாரா என்பது மீதி கதை.

‘கும்கி’ படத்துக்கும், இப்படத்துக்கும் தலைப்பு தவிர எந்த சம்பந்தமும் இல்லை. பிரபு சாலமன், எம்.சுகுமார் கூட்டணி இணைந்தால், திரையில் இயற்கை வனப்பையும், விலங்கின் அன்பையும் கொண்டு வருவார்கள் என்பதை மீண்டும் ‘கும்கி 2’ படத்தின் மூலம் நிரூபித்துள்ளனர். மதி புதுமுகம் மாதிரி தெரியவில்லை. யானைக்கும், அவருக்குமான பந்தம் நெகிழ வைக்கிறது. அவரது சிறுவயது தோற்றத்தில் மாஸ்டர் ரோஷன் சிறப்பாக நடித்துள்ளார்.

சூசன் ஜார்ஜின் பேராசை, அவரது வில்லித்தனத்தை வெளிப்படுத்துகிறது. அரசியல் தலைவராக மறைந்த ‘கயல்’ பெரேரா சிறப்பாக நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் அர்ஜூன் தாஸ், ஹீரோயினாக ஷ்ரிதா ராவ் கச்சிதமாக நடித்துள்ளனர். மற்றும் ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரீஷ் பெராடி, ஸ்ரீநாத், கொட்டாச்சி, பேபி மானஸ்வி ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர்.

சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியையும், அடர்ந்த காடுகளின் வனப்பையும், மலைகளையும், பிரமாண்டமான யானைகளின் கூட்டத்தையும் எம்.சுகுமாரின் கேமரா அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்துள்ளது. படத்தின் ஜீவநாடியாக நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசையும், பாடல்களும் அமைந்துள்ளது. ‘மிருகங்களும் மனிதர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவையே. அதை பலியிடக்கூடாது’ என்ற கருத்தை அழுத்தமாக எழுதி இயக்கியுள்ளார்.