குற்றம் புதிது: விமர்சனம்
அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் மதுசூதன ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார் தம்பதி மகள் சேஷ்விதா கனிமொழி, வழக்கமான பணியை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பும்போது காணாமல் போகிறார். மதுசூதன ராவ் தேடுதல் வேட்டையில் ஈடுபட, மறுநாள் காலையில் இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கிறது. இந்நிலையில், உணவு டெலிவரி ஊழியர் தருண் விஜய், ஒரு பெண்ணை கொன்றதாக சொல்லி போலீசில் சரணடைகிறார். அவர் கொன்ற பெண் சேஷ்விதா கனிமொழியாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தும் போலீசாரிடம் தருண் விஜய், மேலும் 2 கொலைகள் செய்ததாக சொல்லி அதிர வைக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
புதுமுகம் என்றே தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்துள்ள தருண் விஜய், சண்டைக் காட்சியில் துவம்சம் செய்து இருக்கிறார். அவரது காதலியான சேஷ்விதா கனிமொழி, கண்களின் மூலமாகவே உணர்வுகளை கடத்தி விடுகிறார். தந்தை பாசத்தையும், போலீசுக்கான கடுமையையும் வெளிப்படுத்திய மதுசூதன ராவ் மற்றும் ராமச்சந்திரன் துரைராஜ், நிழல்கள் ரவி, ‘பாய்ஸ்’ ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்பட பலர் இயல்பாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.
கிரைம் திரில்லருக்கு ஏற்ற ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம்ஸ் நன்கு வழங்கி இருக்கிறார். கரண் பி.கிருபா பாடல்களும் மற்றும் பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது. எடிட்டர் எஸ்.கமலக்கண்ணன், காட்சிகள் நகர உதவியுள்ளார். எழுதி இயக்கிய நோவா ஆம்ஸ்ட்ராங், புதுவிதமான கிரைம் திரில்லர் படத்தை அளித்துள்ளார். ஆனால், காவல்துறை பலம் வாய்ந்ததாக இருந்தும் கூட சர்வ சாதாரணமாக குற்றங்கள் நடப்பதும், எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் தவிப்பதும் நெருடுகிறது.