தமிழில் டப்பிங் ஆகிறது லீலாவின் கன்னட படம்
சென்னை: கடந்த 2019ல் கன்னடத்தில் ஹிட்டான ‘கிஸ்’ என்ற படம், தமிழில் ‘கிஸ் மீ இடியட்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. இதில் லீலா, வீராட், ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி நடித்துள்ளனர். ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, பிரகாஷ் நிக்கி இசை அமைத்துள்ளார். மணிமாறன் பாடல்கள் எழுதியுள்ளார். கன்னடத்தில் இயக்கியிருந்த ஏ.பி.அர்ஜூன் தமிழிலும் இயக்கியுள்ளார். வரும் 26ம் தேதி படம் வெளியாகிறது. கல்லூரியை விட்டு தன்னை வெளியேற்றிய முதல்வர் பேனர் மீது லீலா வீசிய கல், தவறுதலாக வீராட் காரில் படுகிறது.
இதனால் லீலாவிடம் 4 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்கும் வீராட், பணம் தர முடியாது என்றால், தனக்கு ஒரு முத்தம் தரும்படி கேட்கிறார். இல்லை என்றால், தன்னிடம் உதவியாளராக பணியாற்ற வலியுறுத்துகிறார். அவருக்கு முத்தம் தர மறுத்துவிட்டு உதவியாளராக சேரும் லீலா, ஒருகட்டத்தில் தன்னுடைய காதலை சொல்லும்போது, வீராட் அவரை வேலையை விட்டு வெளியே அனுப்புகிறார். பிறகு லீலாவின் நிஜ காதல் ஜெயித்ததா, இல்லையா என்பது கதை.