‘லோகா’வை வாங்காததால் வருத்தப்பட்ட துல்கர்
சூப்பர் வுமன் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து ஹிட்டாகி, 100 நாட்களை கடந்துள்ள ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இப்படத்தின் பட்ஜெட் இருமடங்கானது. யாரும் இப்படத்தை வாங்க விரும்பவில்லை என்பதுதான் மிகவும் வருத்தமாக இருந்தது. நானும், டொவினோ தாமஸும் கெஸ்ட் ரோலில் நடித்தோம். ‘நீங்கள் சில நிமிடங்கள்தான் படத்தில் வருகிறீர்கள். அதற்கு ஏற்பத்தான் நாங்கள் பணத்தை கொடுப்போம்’ என்று சொன்னார்கள். எல்லோருக்கும் தங்களுடைய படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கும். ஆனால், படம் வெளியாகும் வரையில் அதில் எந்த உறுதியும் கிடையாது. அதை கடந்து ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படம் ஹிட்டாகி வசூலை வாரி குவித்துள்ளது.
ஓடிடி நிறுவனங்களின் வருகை திரைப்படங்களின் பட்ஜெட்டில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதை சார்ந்து திரைப்படங்களின் வியாபாரம் கணக்கிடப்பட்டது. எப்போது அவர்கள் படங்கள் வாங்கும் விலையை குறைத்தார்களோ, அதுவரை மலையாளத்தில் 200 அல்லது 250 படங்கள் உருவாகும் கணக்கு 60 ஆக குறைந்தது. அது அதிக பயத்தை கொடுத்தது. சில நடிகர்கள் 6 மாதங்கள் வரை எந்த வேலையும் இல்லாமல் இருந்தனர். திடீரென்று ஒரு புதிய வியாபாரம் வந்து நம்மை கெடுத்தது. அது இப்போது இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்கு நாங்கள் பழகிவிட்டோம். மலையாள படவுலகம் தியேட்டரை மையப்படுத்தியே இயங்கி வந்த ஒன்று. எனவே, எங்களால் மீண்டும் அதை நோக்கி நகர முடியும் என்று நினைக்கிறேன். அதுதான் சிறந்த வழியும் கூட’ என்றார்.
