‘லோகா’ யூனிவர்ஸில் இணையும் மம்மூட்டி
நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லின் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள படம் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. சூப்பர்வுமன் சப்ஜெக்ட்டில் உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் துல்கர் சல்மான் வரும் காலத்தில் ‘லோகா’ படத்தை 5 பாகங்கள் வரை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
அப்படி துல்கர் சல்மான் கூறியது போல் ‘லோகா’ யூனிவர்ஸ் உருவானால் மலையாளம் மற்றும் பிற மொழி நடிகர்கள் அந்த படங்கள் மூலம் ஒன்றிணைவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மம்மூட்டிக்கு ‘லோகா’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த வாழ்த்து போஸ்டரில் ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மூத்தன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் ‘லோகா’ யூனிவர்ஸில் மம்மூட்டி இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. அவர் கதாபாத்திரத்தின் பெயர் தான் ‘மூத்தன்’ எனவும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்த பாகங்களில் ‘மூத்தன்’ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.