‘லோகா’ வெற்றியால் ‘காந்தா’வுக்கு சிக்கல்
ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் சார்பில் ராணா டகுபதி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் படம் ‘காந்தா’. துல்கர் சல்மான், பாக்ய போர்ஸ் முன்னணி வேடத்தில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜானு சந்தர் இசை அமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2023ம் ஆண்டு துல்கர் சல்மான் சினிமாவில் 13 ஆண்டுகளை கடந்ததையொட்டி வெளியிடப்பட்டது. கடந்த ஜூலை 28ம் தேதி துல்கர் சல்மானின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘காந்தா’ படத்தை வரும் செப்டம்பர் 12ம் தேதி (இன்று) வெளியிட திட்டமிடப்பட்டது.
ஆனால் தற்போது படத்தின் வெளியீட்டை தள்ளிவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘காந்தா’ படத்திற்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவும், அன்பும் எங்களை நெகிழ செய்துள்ளது. இப்படத்தை சிறந்த படைப்பாக உங்களுக்கு கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். ‘லோகா’ படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் வெற்றி முழக்கம் இன்னும் ஓயாத நிலையில் அதன் தொடர்ச்சியாக மற்றொரு சிறந்த படைப்பான ‘காந்தா’வை வெளியிட விரும்புகிறோம். அதனால், ‘காந்தா’ படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளனர்.