தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

எங்களையும் பாருங்கள்: ஆராத்யா ஆவேசம்

ஆனந்தராஜ், சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா சங்கர், சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு நடித்துள்ள படம், ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. அண்ணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரித்துள்ளார். ஏ.எஸ்.முகுந்தன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆவேசமாக பேசிய ஆராத்யா, ‘நான் ஒரு படத்தில் நன்றாக நடிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு காரணம் என் நடிப்பு 50 சதவீதம்தான். மீதியுள்ள 50 சதவீதம் இப்படத்துக்காக உழைக்கும் அனைத்து டெக்னீஷியன்கள்தான்.

ஆனந்தராஜுடன் நடித்தது என் பாக்கியம். இதில் ஆங்கிலோ-இந்திய பெண்ணாக நடித்துள்ளேன். படக்குழு நினைத்திருந்தால், இந்தி அல்லது மலையாளம் போன்ற வேற்றுமொழி பெண்களை நடிக்க வைத்திருக்கலாம். நான் தமிழ் பெண்ணின் முகச்சாயலுடன் இருந்தாலும், என்னை நம்பி இந்த கேரக்டரில் நடிக்க வைத்தனர். ஹீரோயின் என்றாலே 25 வயதுக்குள்தான் இருக்க வேண்டும், திருமணம் ஆகியிருக்க கூடாது, அவருக்கு ஆண் நண்பர்கள் இருக்க கூடாது என்று சொல்வது எல்லாம் ஹீரோயின்களுக்கு வைத்திருக்கும் வழக்கமான ஒன்று என்று நினைக்கிறேன். நான் பார்த்தவரையில் அது உண்மையாகத்தான் இருக்கிறது.

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில், ‘அர்ப்பணிப்புள்ள நடிகர்களை நான் தேர்வு செய்தேன். அவர்கள் எந்த மொழி, எந்த ஊர் என்று பார்க்கவில்லை’ என்றார். தமிழிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நடிகர்கள் இருக்கிறோம் என்பதை மாரி செல்வராஜுக்கு சொல்ல விரும்புகிறேன். எங்களால் முடிந்தளவுக்கு கடுமையாக உழைத்து நடிக்கிறோம். ஆனால், அது உங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும் வந்து சேருவது இல்லை. அதை எப்படி உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது என்றும் தெரியவில்லை. ஆனால், அர்ப்பணிப்புடன் நடிக்கும் நடிகர்கள் தமிழிலும் இருக்கிறோம்’ என்றார். இவர், அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ‘மதிமாறன்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றவர். கேபிஒய் பாலா ஹீரோவாக நடித்திருந்த ‘காந்தி கண்ணாடி’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.