லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் மம்மூட்டியின் பிரமயுகம் திரையிடல்
சென்னை: நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ், ஒய்நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, ராகுல் சதாசிவன் இயக்கிய படம், ‘பிரமயுகம்’. கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான இப்படம், மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை பெற்று தந்தது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில், வரும் ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை இப்படம் திரையிடப்படுகிறது. இது கேரள நாட்டுப்புற கதைகளின் இருண்ட காலங்களின் பயம், சக்தி மற்றும் மனித பலவீனம் பற்றிய கதையாகும். கருப்பு, வெள்ளையில் வெளியான இப்படம் அதன் ஆளுமைத்திறன், கதைசொல்லல் ஆகியவற்றுக்காக பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இதில் கொடுமன் பொட்டி என்ற கேரக்டரில் மம்மூட்டி நடித்திருந்தார். மற்றும் அர்ஜூன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் நடித்திருந்தனர். ஷெஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்ய, கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்திருந்தார். ரோனெக்ஸ் சேவியர், எஸ்.ஜார்ஜ் வசனம் எழுதியிருந்தனர்.
