பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்
சென்னை: தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பூவை செங்குட்டுவன் (90) நேற்று காலமானார். சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி என்னும் ஊரில் பிறந்த பூவை செங்குட்டுவன் தனது வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படபாடல்களும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தட்டு பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் 2 திரைப்படங்களுக்கு கதை, 3 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 15ற்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், 30க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் என பல்துறையில் பங்காற்றியவர். பக்திப் பாடல்கள் எழுதுவதில் சிறந்து விளங்கியவர்.
‘அகத்தியர்’ படத்தில் இடம்பெற்ற ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’, ‘ராஜ ராஜ சோழன்’ படத்தில் ‘ஏடு தந்தானடி தில்லையிலே’, ‘புதிய பூமி’ படத்தில் எம்.ஜி.ஆருக்காக அவர் எழுதிய ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’, ‘கந்தன் கருணை’ படத்தில் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிறிதாய்’ உள்ளிட்ட பாடல்கள் அவர் எழுதியதில் குறிப்பிடத்தக்கவை. அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகிய 5 தமிழகத்தின் முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமை இவருக்கு உண்டு. இவ்வளவு பெருமைகளுக்கு சொந்தக்காரரான பூவை செங்குட்டுவன் சென்னையிலுள்ள அவரது வீட்டில் நேற்று காலமானார்.