மதறாஸ் மாஃபியா கம்பெனி: விமர்சனம்
பிரபல தாதா ஆனந்தராஜ். அவரது தலைமையை விரும்பாத சில அதிருப்தியாளர்கள், கூடவே இருந்து அவரை கொல்ல சதி திட்டம் தீட்டுகின்றனர். இதற்கிடையே ஐபிஎஸ் அதிகாரி சம்யுக்தா சண்முகநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து, ஆனந்தராஜை என்கவுண்டர் செய்ய டிஜிபி ஆணையிடுகிறார். போலீசாரின் திட்டம் நிறைவேறியதா? சூழ்ச்சியில் சிக்கிய ஆனந்தராஜ் என்ன ஆகிறார் என்பது மீதி கதை.
மதறாஸ் மாஃபியா கம்பெனியின் தலைவராக ஆனந்தராஜ் அட்டகாசமாக நடித்துள்ளார். கிளைமாக்ஸில் அவரது அவதாரமும், செயல்பாடும் எதிர்பாராதது. ஆனால், அவரது தலையிலுள்ள ‘விக்’ உறுத்துகிறது. என்கவுண்டர் செய்ய துடிக்கும் சம்யுக்தா சண்முகநாதன், பல காட்சிகளில் போலீசுக்கான மிடுக்கை வெளிப்படுத்தவில்லை. ஆனந்தராஜ் மனைவிகளாக தீபா சங்கர், சசி லயா, காதலியாக ஷகீலா ஆகியோர் சுவாரஸ்யத்துக்கு உதவுகின்றனர். முனீஷ்காந்த், மிப்பு கோஷ்டி ஆனந்தராஜை கொல்ல முயன்று தோற்று காமெடி செய்துள்ளனர். மற்றும் ஆராத்யா, ரிஷி, ராம்ஸ் ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர். ரவுடிகளின் அடைமொழி சுவாரஸ்யமாக இருக்கிறது.
வடசென்னை ஏரியாவுக்கு ஏற்ற பாடல்களை வழங்கிய ஸ்ரீகாந்த் தேவா, பின்னணி இசையில் உதவி செய்துள்ளார். அசோக் ராஜ் ஒளிப்பதிவு இயல்பு மீறாமல் இருக்கிறது. ரவுடிகளுக்கான கதையில் காதல், பேமிலி சென்டிமெண்ட், காமெடி கலந்து எழுதி இயக்கியுள்ள ஏ.எஸ்.முகுந்தன், 2ம் பாகத்துக்கு லீட் கொடுத்துள்ளார். மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
