மகாசேனா படத்தில் விமல் ஜோடியானார் சிருஷ்டி டாங்கே
சென்னை: மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பிரமாண்டமான படம், ‘மகாசேனா’. விமல், சிருஷ்டி டாங்கே ஜோடியுடன் யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவக்ரிஷ்ணா, இலக்கியா, விஜய் சேயோன் நடித்துள்ளனர். முக்கிய கேரக்டரில் யானை நடித்துள்ளது. ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரித்துள்ளார். பாடல்களுக்கு ஏ.பிரவீன் குமார், உதய் பிரகாஷ் இசை அமைத்துள்ளனர். நாகூரான் ராமச்சந்திரன் எடிட்டிங் செய்ய, உதய் பிரகாஷ் பின்னணி இசை அமைத்துள்ளார். டி.ஆர்.மனஸ் பாபு ஒளிப்பதிவு செய்ய, ராம்குமார் சண்டை காட்சி அமைத்துள்ளார். தஸ்தா, ஆமீர் நடன பயிற்சி அளித்துள்ளனர். வி.எஸ்.தினேஷ் குமார் அரங்கம் அமைத்துள்ளார். கூடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டி ஆகிய பகுதிகளில் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்கியுள்ள தினேஷ் கலைச்செல்வன் கூறுகையில், ‘நம்பிக்கை, சக்தி மற்றும் இயற்கையின் சீரான சமநிலை பற்றிய கதையான இதில், காடு என்பது உயிருடன் இருக்கும் முக்கிய கதாபாத்திரம். தெய்வீக ஒற்றுமையை பேராசை எவ்வாறு சீர்குலைக்கிறது? ஆன்மிகம் அதை எவ்வாறு சீரமைக்கிறது என்பதை சொல்லியிருக்கிறேன். திருவிழா கிளைமாக்ஸ், உணர்ச்சிகரமான கதைக்களம், நவீன தொழில்நுட்பங்கள் ரசிகர்களை பெரிதும் கவரும். வரும் 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது’ என்றார்.
