பணிப்பெண்ணை வைத்து ஆபாச வீடியோ: டிம்பிள் ஹயாதி கைது?
ஐதராபாத்: தெலுங்கு, தமிழ், இந்தி என 3 மொழிகளிலும் ஹீரோயினாக படங்கள் நடித்து இருப்பவர் டிம்பிள் ஹயாதி. அவர் மீது அவரது பணிப்பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழில் தேவி 2 படத்தில் பிரபு தேவாவுடன், விஷால் ஜோடியாக வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். ஐதராபாத்தில் ஷேக்பெட் என்னும் இடத்தில் இருக்கும் வெஸ்ட்உட் அபார்ட்மென்ட்டில் டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டுக்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் பிரியங்கா பீபர் கடந்த செப்டம்பர் 22ம் தேதி பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே தன்னை நடிகை மோசமாக நடத்தினார், உணவு கூட சரியாக தரவில்லை என அந்த பெண் தற்போது போலீசில் புகார் அளித்து இருக்கிறார். டிம்பிள் ஹயாதி தன்னை மோசமாக பேசினார். ‘‘உன் வாழ்க்கை என் செருப்புக்கு கூட ஈடாக இருக்காது’’ என பேசினார் எனவும் கூறி இருக்கிறார். மேலும் தன்னை ஆபாசமாக வீடியோ எடுக்க முற்பட்டதாகவும் பகீர் தகவல் தெரிவித்திருக்கிறார். செப்டம்பர் 29ம் தேதி தான் பிரச்னை பெரிதாகி இருக்கிறது. வீட்டின் நாய் குரைத்துக்கொண்டே இருந்ததால் டிம்பிள் ஹயாதி மற்றும் அவர் கணவர் டேவிட் இருவரும் பிரியங்காவை படுமோசமாக திட்டினார்களாம். சண்டையில் தனது உடை கிழிக்கப்பட்டது எனவும் பிரியங்கா போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இந்த சம்பவம் பற்றி தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் டிம்பிள் ஹயாதி கைதாகலாம் என சொல்லப்படுகிறது.