நடிப்புக்காக தமிழ் கற்ற மலையாள நடிகை
‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை தொடர்ந்து அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், வின்சு ரேச்சல் சாம், ரித்விகா, ஷபீர் நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’ என்ற படம், வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தை பற்றி பேசிய ரித்விகா, ‘இந்த படத்தில் புதிய களமும், புதிய கதையும் இருக்கிறது. சொல்லப்படாத கதாபாத்திரங்கள் இருக்கின்றன. இயக்குனர் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளாமல் இயக்கி இருக்கிறார். ஒரு நல்ல படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
அந்த அடிப்படையில் இப்படத்துக்கும் பேராதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார். தொடர்ந்து பேசிய வின்சு ரேச்சல் சாம், `மாடலிங் துறையில் இருந்ததால், கேமரா முன்பு நடிப்பதில் எனக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானேன். தாய்மொழி மலையாளம் என்பதால், தமிழில் சரளமாக பேச முடியவில்லை. எனவே, தமிழில் பேச கற்றுக்கொண்டேன்.
சில படங்களில் நடித்துள்ள நான், இந்த படத்துக்கான ஆடிஷனில் சரியாக நடிக்கவில்லை. நான் பேசிய தமிழும் நன்றாக இல்லை. படத்தில் கிராமத்து தமிழுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும், அதுபற்றி கவலைப்படாமல் எனக்கு வாய்ப்பு கொடுத்தனர். பிறகு நான் தமிழ் கற்றுக்கொண்டு, படத்தின் முழு வசனத்தையும் மனப்பாடம் செய்துகொண்டேன். எனக்கு முழு நம்பிக்கை வந்த பிறகே படப்பிடிப்புக்கு சென்றேன்’ என்றார்.