மமிதாவின் நிறைவேறாத டாக்டர் கனவு
திரைக்கு வந்த ‘பிரேமலு’, ‘ரெபல்’, ‘டியூட்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘ஜன நாயகன்’, ‘சூர்யா 46’, ‘தனுஷ் 54’, ‘இரண்டு வானம்’, மலையாளத்தில் ‘பெத்லேகம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களில் நடித்து வரும் மமிதா பைஜூ அளித்துள்ள பேட்டியில், ‘சிறுவயதில் என் தந்தையை போல் எனக்கும் டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் அவரது கிளினிக்கிற்கு சென்றால், அங்குள்ள அனைவரும் என்னை ‘பேபி டாக்டர்’ என்று அழைப்பார்கள். நோய் குணமடைந்து மகிழ்ச்சியாக அப்பாவிடம் வந்து நன்றி சொல்லும் நோயாளிகளை பார்த்தால், எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படும்.
அந்த தொழில் மீது எனக்கு எப்போதுமே அளவுகடந்த மரியாதை இருக்கிறது. சினிமா என்பது என் வாழ்க்கையில் தற்செயலாக வந்தது. நான் 9ம் வகுப்பு படிக்கும்போது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தை என் தந்தையின் நெருங்கிய நண்பர் அஜி அங்கிள் தயாரித்தார். அவர் என்னை தொடர்ந்து ஆடிஷன் நடக்கும் இடங்களுக்கு போக சொன்னார். அப்படத்துக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. மெதுவாக நான் நடிப்பை ரசிக்க தொடங்கினேன். சினிமாவுடன் எனக்கு ஒரு பிணைப்பு ஏற்பட்டது. எனது பெற்றோரிடம், சினிமாதான் என் வாழ்க்கை பாதை என்று சொன்னேன். பிறகு அவர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தனர்’ என்றார்.
 
 