மம்மூட்டிக்கு விருது கொடுக்கும் அளவுக்கு ஒன்றிய அரசுக்கு தகுதியில்லை: பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு
சென்னை: மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளில் ‘பிரம்மயுகம்’ படத்திற்காக ‘சிறந்த நடிகர்’ விருதைப் பெற்றுள்ளார். ‘பிரம்மயுகம்’ படத்திற்காக மம்மூட்டிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று திரைத்துறையைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், மம்மூட்டிக்கு தேசிய விருது வழங்கப்படாதது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கேரள அரசு மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்திற்காக சிறந்த நடிகர் விருதை அறிவித்திருப்பதைப் பலரும் மகிழ்ச்சியடைந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் கேரள அரசின் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு ஜூரி தலைவராக பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறும்போது, ‘‘கேரள அரசின் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு ஜூரி தலைவராக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. மலையாள சினிமாவை வெளியில் இருந்து பார்ப்பவர்களின் கருத்துகள் அவர்களுக்குத் தேவைப்பட்டதால் என்னை அழைத்தார்கள். ‘நீங்கள் எடுக்கும் முடிவுகளில் எந்தத் தலையீடும், இடையூறும் இருக்காது, முழு சுதந்திரத்துடன் முடிவுகளையும், உங்கள் கருத்துகளை வைக்கலாம்’ என்று சொன்னார்கள்.
ஆனால், தேசிய விருதுகளில் அது நடப்பதில்லை. தேசிய விருதுகளில் நிறைய சமரசங்கள் செய்கிறார்கள், தவறுகள் இருக்கிறது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. திறமைக்கு மதிப்பளித்து சமரசமின்றி விருதுகள் அறிவிக்கும் ஜூரி குழுவும், அரசும் இல்லையென்றால் அவர்கள் அறிவிக்கும் விருதிற்கும் மதிப்பிருக்காது. மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களைப் போன்றவர்களுக்குத் தகுதியில்லை’’ என்று காட்டமாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
