தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மனதை புண்படுத்தாதீர்கள் ரிஷப் ஷெட்டி உருக்கம்

ஓரிரு நாளில் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற பான் இந்தியா படத்தை பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், தெய்வத்தை போல் உடையணிந்து வரவேண்டாம் என்று, படத்தை எழுதி இயக்கி நடித்துள்ள ரிஷப் ஷெட்டி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயமாகும். நாங்கள் இதை மனதில் வைத்து படத்தை உருவாக்கவில்லை.

இது என் மனதை மிகவும் காயப்படுத்துகிறது. சினிமாட்டிக் அனுபவத்துக்காகவும், கதையின் தேவைக்காகவும் இதை செய்கிறோம். படத்துக்குள் காட்டியிருக்கும் தெய்வம் என்ற விஷயம், வெறும் சினிமா மட்டுமே இல்லை. இப்படத்திலுள்ள நிறைய அம்சங்கள் கேலி செய்யக்கூடாத அளவுக்கு மிகவும் புனிதமானவை. இதை நாங்கள் சீரியசாகவே கையாண்டுள்ளோம். தெய்வ நர்த்தகர் (ஆன்மீக கலைஞர்) அதிக கவனத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

அதை உருக்குலைய வைக்கக்கூடாது. தெய்வத்தை காட்சிப்படுத்தும்போதும், நடிக்கும்போதும் ஆசி பெற்றே செய்தோம். அந்த நேரங்களில் அனைவரும் கவனமாக நடந்துகொணடனர். சிலர் சோஷியல் மீடியாவில் வைரலாவதற்காகவும், ஆர்வத்தினாலும் தேவையில்லாத விஷயங்களை செய்து வருகின்றனர்.

தயவுசெய்து இனிமேல் அதை செய்யாதீர்கள். எங்கள் சமூகத்தில் இருந்து ஒரு படைப்பை உருவாக்கியுள்ளோம். தயவுசெய்து படத்தை தியேட்டர்களில் ஒரு சினிமாவாக பார்த்து அனுபவியுங்கள். நாங்கள் என்ன காட்டியிருக்கிறோமோ அது எங்களுக்கு மிகவும் புனிதமானது’ என்றார். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பு செய்தவர், ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி ஷெட்டி.