மணிரத்னம் படமா? தெறித்து ஓடும் ஹீரோக்கள்
சென்னை: மணிரத்னம் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்கப்பட்டால் ஹீரோக்கள் ஒதுங்கிவிடும் சூழல் தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ‘மவுன ராகம்’, ‘இதயக் கோயில்’, ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’, ‘தளபதி’ உள்ளிட்ட படங்களால் ரசிகர்கள் விருப்பம் தெரிந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை தந்தவர் மணிரத்னம். அதனாலேயே அவரை சிறந்த இயக்குனராக மக்கள் கொண்டாடினர். ஆனால் 2000க்கு பிறகு அவர் படங்களில் தடுமாற்றம் தெரிய ஆரம்பித்தது. ஒரு படம் நன்றாக தந்தால் இன்னொரு படத்தில் பெரும் சரிவை தரும் இயக்குனராக மாறினார்.
அதிலும் அவரது சில படங்கள் படு தோல்வியை சந்தித்தன. அதிலும் 2000க்கு பிறகு வெளியான அவரது படங்களான ‘குரு’, ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து தோல்வியை கண்டன. இதில் மக்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான ‘பொன்னியின் செல்வன்’ மட்டும் தப்பித்தது. அதன் மொத்த பெருமையும் கல்கியையே சாரும்.
இதற்கிடையே மணிரத்னம் படம் என்றாலே பிரபல ஹீரோக்கள் பலரும் நடிக்க தயங்குகிறார்கள். ஒரு காலத்தில் மணிரத்னத்தின் பெயருக்காகவே அவரது படத்தில் நடிக்க ஹீரோக்கள் வரிசை கட்டி நின்ற காலம் இருந்தது. இப்போது அதுபோல் இல்லை. அதற்கு முக்கிய காரணம், ஹீரோக்களுக்கு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை மணிரத்னம் கொடுக்காததுதான். ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்தபோது கார்த்திக்கு இந்த நிலைதான் ஏற்பட்டதாம்.
அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை ஒரு பாகம் எனக் கூறி, ஒரே சமயத்தில் பெரிய படமாக படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டார். பலருக்கு ஒரு பாகத்துக்கான சம்பளம் மட்டுமே தரப்பட்டுள்ளது. அதன் பிறகுதான், தாங்கள் இரண்டு பாகத்தில் நடித்து முடித்திருக்கிறோம் என பல நடிகர்களுக்கு தெரியவந்துள்ளது. ‘ஹீரோக்களுக்கே இந்த கதி என்றால், துணை நடிகர்களுக்கு சம்பளமே தராத மோசமான சம்பவங்கள் எல்லாம் மணிரத்னம் யூனிட்டில் நடக்கும்’ என துணை நடிகர்கள் பலர் புலம்புகிறார்கள்.
தனக்கு கிடைத்திருக்கும் நற்பெயரை பயன்படுத்தி அவர் இதுபோல் செய்கிறார். தனது படத்தில் நடித்தாலே போதும், வேறேதுவும் எதிர்பார்க்கக் கூடாது என்ற ரீதியில் மணிரத்னம் செயல்படுவதாக சினிமாத் துறையில் இருப்பவர்களும் சொல்கிறார்கள். ஆனால் படம் ஹிட்டானால் மட்டும் அதிலிருந்து கோடி கோடியாய் அவர் மட்டும் சம்பாதிக்கிறார். இது என்ன நியாயம் என்று பாதிக்கப்பட்ட நடிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.