மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் பாலன்
சென்னை: மலையாளத்தில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. அடுத்து இதன் இயக்குனர் சிதம்பரம் எஸ்.பொதுவால், ‘ஆவேஷம்’ ஜித்து மாதவன் இணைந்து பணியாற்றும் புதிய படம், ‘பாலன்’. கே.வி.என் புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் பிலிம்ஸ் சார்பில் வெங்கட் கே.நாராயணா, ஷைலஜா தேசாய் ஃபென் இணைந்து தயாரிக்கின்றனர். ஷைஜூ காலித் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷியாம் இசை அமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். ‘பாலன்’ படத்தின் மூலம் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மலையாள படவுலகில் களமிறங்குகிறது. இந்த ஆண்டிலேயே கே.வி.என் புரொடக்ஷன்ஸ் ‘கே.டி’ என்ற கன்னட படத்தையும், யஷ் நடிக்கும் ‘தி டாக்ஸிக்’ என்ற பான் இந்தியா படத்தையும், தமிழில் ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜன நாயகன்’ என்ற படத்தையும், பிரியதர்ஷன் இயக்கும் இந்தி திரில்லர் படத்தையும் தயாரித்து வருகிறது.