திருமணமானால் நடிக்கக் கூடாதா? சாந்தினி தமிழரசன்
சென்னை: நெட்பிளிக்சில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது ‘தி கேம்’ வெப்சீரிஸ். கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார். இந்த சீரிஸ் மூலம் பேசப்பட்டு வரும் சாந்தினி தமிழரசன் கூறியது: ‘தி கேம்’ சீரிஸ் பெரும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் முறையாக இதில் போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறேன். இதற்காக காவல் நிலையம் சென்று சில பெண் போலீசாரின் நடவடிக்கைகள் கவனித்து இந்த கேரக்டருக்கு தயார் ஆனேன். ‘டெல்லி க்ரைம்’ வெப்சீரிஸில் நடித்த ஷெஃபாலி ஷாவின் நடிப்பும் இன்ஸ்பயராக எடுத்துக்கொண்டேன்.
திருமணத்துக்கு பிறகும் நான் பிசியாக நடிப்பதற்கு எனது கணவரின் ஆதரவு முக்கியமானது. வழக்கமாக திருமணம் ஆகிவிட்டால் நடிகைகள் நடிக்கக் கூடாது என்ற எழுதப்படாத விதிமுறை தமிழ் சினிமாவில் இருந்தது. அதை இப்போது பலரும் உடைத்து வருகிறார்கள். இது மகிழ்ச்சி. திருமணத்துக்கு பிறகு எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்து வருகிறது.
நான் சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், நான் ‘சித்து பிளஸ் டூ’ படத்தில் நடிக்க வந்தபோது, தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வருவதே குறைச்சலாக இருந்தது. இப்போதும் அந்த நிலைதான் இருக்கிறது. தமிழ் பெண் என்பதால் எனக்கு பட வாய்ப்புகள் வந்தும் இருக்கிறது. தமிழ் பெண் என்பதாலேயே வராமலும் போயிருக்கிறது. மும்பை நடிகைகளை நாடிச் செல்லும் இயக்குனர்கள், தமிழ் பெண்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது விதார்த் ஜோடியாக ஒரு படம், தம்பி ராமையா மகன் உமாபதி இயக்கும் படத்தில் நட்டியுடன் நடிக்கிறேன், வெற்றி ஜோடியாக ஒரு படமும் ‘குற்றம் கடிதல் 2’விலும் ‘தி கேம்’ வெப்சீரிஸின் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறேன். இவ்வாறு சாந்தினி தமிழரசன் கூறினார்.