ஹீரோவுக்கு ஐஸ் வைத்த மெஹ்ரின்
காவல்துறை அதிகாரியாக வசந்த் ரவி நடித்துள்ள ‘இந்திரா’ என்ற படம், வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் அவரது ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ளார். பஞ்சாபி, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் அவர், இதற்கு முன்பு தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், ‘இந்திரா’ படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்திருந்த மெஹ்ரின் பிர்சாடா கூறுகையில், ‘நான் மும்பையில் இருந்தபோது, டைரக்டர் சபரீஷ் நந்தா போன் செய்து முழு கதையையும் சொன்னார். அவர் ஒரு புது இயக்குனர் என்றாலும், கதை சொல்லும் ஸ்டைலில், அவரிடம் ஒரு தெளிவு இருந்தது. மிகவும் அற்புதமாக கதையையும், எனது கேரக்டரையும் சொன்னார்.
அதுபோல், இப்படத்தையும் அட்டகாசமாக இயக்கியுள்ளார். படப்பிடிப்பில் நான் கலந்துகொண்டு நடித்த ஒவ்வொரு நாளும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. உண்மையிலேயே கயல் கதாபாத்திரம் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கேரக்டர் என்று சொல்லலாம். வசந்த் ரவியுடன் இணைந்து நடித்தது, மறக்க முடியாத இனிமையான அனுபவமாக இருந்தது. தமிழ் எனக்கு புரியும். ஆனால், பேச வராது. எனவே, படப்பிடிப்பில் தமிழ் வசனங்களை எப்படி பேசுவது என்று அவர்தான் எனக்கு கற்றுக்கொடுத்தார். இயல்பாகவே அவர் ஒரு நல்ல நடிகர்’ என்று, ஐஸ் வைத்தார்.