மீலாதுன் நபி விமர்சனம்...
மீலாதுன் நபி என்றால், நபிகள் பிறந்தநாள் என்று பொருள். இஸ்லாமிய மார்க்கத்தின் நிறுவனர் நபிகள் நாயகம் இறைதூதராக மதிக்கப்படுகிறார். நபிகளின் வாழ்க்கை, கொள்கைகள், போதனைகள் பற்றிய பயோபிக் படம் இது. உருவ வழிபாட்டுக்கு எதிராக இஸ்லாம் என்ற சமயத்தை உருவாக்கிய அவர், தனக்கு உருவம் கற்பிக்க கூடாது என்று வலியுறுத்தியவர். நபிகளை திரையில் காட்ட முடியாது. எனவே, அவரது வாழ்க்கையை பற்றி மூவர் கதை சொல்வது போல் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நபிகள் கதையை இமாம் அப்துல் கையூம், இமாம் உமர், இமாம் சதக்கத்துல்லா சொல்கின்றனர். நபிகள் பிறந்து வாழ்ந்த இடம், செய்த போர்கள், அவரை பற்றிய விமர்சனங்கள், எதிரிகளை எதிர்கொண்ட விதம் போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. அவை கதை நிகழும் பாலைவன பிரதேசத்துக்கே பார்வையாளர்களை அழைத்துச் செல்கின்றன. இஸ்லாம், இஸ்லாமியர் குறித்த நம்பிக்கைகளுக்கு விளக்கமும், இஸ்லாமியர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற கருத்துக்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது.
நாகூர் ஹனீபா மகன் நவுஷாத், பாடகர் சாகுல் ஹமீது தம்பி சம்சுதீன், ரஹீமா, பரிதா பாடியுள்ளனர். இஸ்லாமிய கலாச்சாரத்தை நினைவூட்டும் பாடல்களையும், பின்னணி இசையையும் எஸ்.ஆர்.ராம் வழங்கி யுள்ளார். கதைக்கு ஏற்ப லலித் ராகவேந்தர் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்துள்ளார். இஸ்லாமியருக்கு தங்கள் மதத்தை பற்றிய கூடுதல் புரிதல் ஏற்படவும், பிற மதத்தினருக்கு இஸ்லாம் குறித்த அறிமுகம் பெறவும் படம் உதவும். திரைக்கதை, வசனம், பாடல்கள், ஏஐ கிரியேஷன், தயாரிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்பு களை சிங்கப்பூர் மில்லத் அகமது திறம்பட ஏற்றுள்ளார். இவர் ‘ஆந்தை’ என்ற படத்தை இயக்கியிருந்தவர்.
