மோகன்லாலை நெகிழ வைத்த மம்மூட்டி
மலையாள மெகா ஸ்டார் மோகன்லாலுக்கு சமீபத்தில் ஒன்றிய அரசு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது. இவ்விருது வழங்கப்பட்ட நேரத்தில், இன்னொரு மெகா ஸ்டார் மம்மூட்டி தனது இதயபூர்வமான வாழ்த்துகளை மோகன்லாலுக்கு தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்ததால், அவர்கள் இருவரும் நேரில் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அதற்கு முன்பு மலையாளத்தில் மகேஷ் நாராயணன் இயக்கும் ‘பேட்ரியாட்’ என்ற படத்தில், பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் மம்மூட்டியும், மோகன்லாலும் சில நாட்கள் இணைந்து நடித்தனர்.
தற்போது கொச்சியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இதில் மம்மூட்டி, மோகன்லால், குஞ்சாக்கோ போபன் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன. அப்போது படப்பிடிப்புக்கு வந்த மோகன்லாலை வரவேற்ற மம்மூட்டி, அவருக்கு சால்வை அணிவித்து, தாதா சாஹேப் பால்கே விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். நண்பரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட மோகன்லால், ஆனந்தக்கண்ணீர் வழிய மம்மூட்டியை கட்டியணைத்து நன்றி சொன்னார்.
