மூன்வாக் படத்தில் 5 பாடல்களையும் பாடிய ரஹ்மான்
சென்னை: பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’, மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார். தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என இந்த படத்தில் ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு விதத்தில், ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை படைக்கும் வகையில் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளது. இது குறித்து ரஹ்மான் கூறும்போது, ‘பிரபுதேவாவுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி. அவரிடம் ஏற்பட்டுள்ள ஒரே மாற்றம், தலைமுடி லேசாக நரைத்து இருப்பதுதான்’ என காமெடியாக தெரிவித்தார். இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் பாடும்படி மனோஜ் கேட்டுக்கொண்டதால் பாடியிருக்கிறேன்’ என்றார். பிரபுதேவா கூறுகையில், ‘ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகும் இப்படம், அடுத்த ஆண்டில் கோடை விடுமுறைக்கு வெளியாகும்’ என்றார்.
