அம்மாவாக நடிக்க பயப்பட மாட்டேன்: ரக்ஷனா
சென்னை: அறுவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி.வெங்கடேசன் தயாரித்துள்ள படம், ‘மருதம்’. அடுத்த மாதம் 10ம் தேதி திரைக்கு வரும் இதில் விதார்த், ‘மார்கழி திங்கள்’ ரக்ஷனா ஜோடியாக நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் அருள்தாஸ், மாறன், சரவண சுப்பையா, ‘தினந்தோறும்’ நாகராஜ், மாத்யூ வர்கீஸ் நடித்துள்ளனர். அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். பி.சந்துரு எடிட்டிங் செய்ய, நீதி பாடல்கள் எழுதியுள்ளார்.
இயக்குனர்கள் சரவண சுப்பையா, மோகன் ராஜா, ‘பொம்மரிலு’ பாஸ்கர் ஆகியோரிடம் உதவியாளராக இருந்து வரும், அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றவரும், தற்போது எஸ்.ஆர்.எம் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவருமான வி.கஜேந்திரன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் குறித்து ரக்ஷனா கூறும்போது, ‘தமிழில் எனது 2வது படத்திலேயே ஒரு மகனுக்கு அம்மாவாக நடித்துள்ளேன். மற்றவர்கள் நடிக்க பயப்பட்டு மறுத்த வேடத்தில் துணிச்சலுடன் நடித்து, அந்த இமேஜை உடைக்க வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம். தொடர்ந்து நான் இதுபோல் நடிப்பேன்’ என்றார்.