MR.ZOO KEEPER: விமர்சனம்
நீலகிரி மலை கிராமத்திலுள்ள கேரட் கம்பெனியில் புகழ், தேயிலை கம்பெனியில் ஷிரின் காஞ்ச்வாலா பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ஒரு மகன். காட்டில் திரியும் ஒரு பூனைக்குட்டி மீது இரக்கப்பட்டு, வீட்டின் ஒரு மூலையில் மனைவிக்கு தெரியாமல் வைத்து வளர்க்கிறார் புகழ். நாளடைவில் அது பூனைக்குட்டி அல்ல, புலிக்குட்டி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு ஆரம்பிக்கும் சட்ட விளையாட்டில் புகழ் குடும்பம் சிக்குவதே மீதிக் கதை. செல்லப்பிராணிகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான அன்பை மையப்படுத்தி எழுதி இயக்கியுள்ளார் ஜே.சுரேஷ்.
விவரம் தெரியாத சின்னத்தம்பி கேரக்டரில் புகழ் யதார்த்தமாக நடித்துள்ளார். பூனை அல்ல, புலி என்று தெரிந்தும் அதிக பாசம் செலுத்துவது உருக வைக்கிறது. அவரது மனைவியாக ஷிரின் காஞ்ச்வாலா இயல்பாக நடித்துள்ளார். விஜய் சீயோன், சிங்கம்புலி, முத்துக்காளை, சுப்பிரமணியம் சிவா, இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, வர்கீஸ் ஆகியோர் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர். நிஜ புலிக்குட்டியையும், நீலகிரி வனப்பகுதியையும் தன்வீர் மிர் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கூடுதல் பலம். திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருந்தால், புலியின் வேகத்துக்கு ஏற்ப படம் இருந்திருக்கும்.