மிருணாளுக்கு பதிலடி கொடுத்த பிபாஷா
சமீபத்தில் தனுஷை ரகசியமாக காதலிப்பதாக கிசுகிசுவில் சிக்கியவர், மிருணாள் தாக்கூர். இத்தகவல் காட்டுத்தீ போல் பரவிய நிலையில் பதறிய அவர், ‘தனுஷ் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே. மற்றபடி அவரை நானோ அல்லது அவர் என்னையோ காதலிக்கவில்லை’ என்று அறிக்கை விடுத்து, தங்களை பற்றி வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பல்வேறு மொழிகளில் நடித்து பிசியாக இருக்கும் அவர், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார். அதாவது, சில வருடங்களுக்கு முன்பு மிருணாள் தாக்கூர் அளித்த ஒரு பேட்டியில், பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்த பிபாஷா பாசுவை உருவ கேலி செய்யும் வகையில் பேசியிருந்தார்.
‘பிபாஷா பாசு ஆண் போன்ற தோற்றத்துடன் இருக்கிறார். அவரைவிட நான் எவ்வளவோ பரவாயில்லை’ என்று கூறியிருந்தார். மிருணாள் தாக்கூர் பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து பிபாஷா பாசு வெளியிட்டுள்ள பதிவில், மிருணாள் தாக்கூருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அப்பதிவில் அவர், ‘வலிமையான பெண்கள் மற்றவர்களையும் உயர்த்தி விடுவார்கள். அழகிய பெண்களே கட்டுமஸ்தான உடம்பை வைத்துக்கொள்ளுங்கள். பெண்கள் உடல்ரீதியாக வலிமையாக இருக்கக்கூடாது என்ற பழங்கால எண்ணத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.