முனீஷ்காந்த் மனைவி வேடத்தில் விஜயலட்சுமி
ஆக்சஸ் பிலிம் பேக்டரி, குட் ஷோ சார்பில் தேவ், கே.வி.துரை தயாரித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. கிஷோர் எம்.ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் முனீஷ்காந்த் கதையின் நாயகனாக நடிக்க, அவரது மனைவியாக விஜயலட்சுமி நடித்துள்ளார். வரும் 21ம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து கிஷோர் எம்.ராமலிங்கம் கூறுகையில், ‘ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் மாறுபட்ட மனநிலையில் இருப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து படம் அலசுகிறது. கிராமத்தில் நிலம் வாங்கி வீடு கட்டிக்கொண்டு, கடைசிவரை நிம்மதியாக வாழ வேண்டும் என்பது முனீஷ்காந்தின் ஆசை. நகரத்திலேயே ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பது விஜயலட்சுமியின் ஆசை.
இதனால் அவர்கள் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். தனது எண்ணத்தை அதட்டலுடன் வெளிப்படுத்தினாலும், முனீஷ்காந்த் அதை பெரிய சர்ச்சையாக்காமல் மனதுக்குள் புழுங்கிக்கொண்டு அமைதியாக குடும்பத்தை நடத்துகிறார். அப்போது அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பது கதை. முதலில் குடும்பக்கதையாக சென்று, பிறகு யூடியூப் பற்றிய கதையாக மாறி, அதன்மூலம் ஒரு குடும்பம் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறது என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறேன். ராதாரவி, குரோஷி, காளி வெங்கட், வேல.ராமமூர்த்தி, மாளவிகா அவினாஷ், கோடாங்கி நடித்துள்ளனர். சுதர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் உதவியாளர் பிரணவ் முனிராஜ் இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன், கதிர்மொழி, ஏகன் பாடல்கள் எழுதியுள்ளனர்’ என்றார்.
