எனது வாட்ஸ்அப் எண் மூலம் மோசடி: ரகுல் பிரீத் சிங் எச்சரிக்கை
மும்பை: பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், வெப்தொடர்கள், இசை ஆல்பங்கள், விளம்பரங்களில் நடித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர், ரகுல் பிரீத் சிங். சமீபகாலமாக சில நடிகைகளின் பெயரில் போலியான வாட்ஸ்அப் எண் உருவாக்கி, சில மோசடி சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ருக்மணி வசந்த், அதிதி ராவ் ஹைதரி, ஸ்ரேயா சரண் போன்ற நடிகைகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர். தற்போது ரகுல் பிரீத் சிங்கிற்கும் இதுபோல் நடந்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நண்பர்களே... யாரோ ஒருவர் என்னை போல் வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்து, மக்களுடன் தொடர்ந்து அரட்டையடிப்பது எனக்கு தெரியவந்தது. இது எனது எண் கிடையாது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவும். அந்த நபருடன் எந்த பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம். தயவுசெய்து அந்த எண்ணை பிளாக் செய்யவும்’ என்று குறிப்பிட்டு, அந்த போலி எண்ணை பகிர்ந்துள்ளார்.
