ஸ்ருதிஹாசனுக்கு புதுப்பெயர் சூட்டிய மிஷ்கின்
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ள படம், ‘ட்ரெயின்’. முழுநீள ரயில் பயணத்தை பற்றிய கதை கொண்ட இதில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த உலகத்தில் வாழ விருப்பமே இல்லாத விஜய் சேதுபதி, திடீரென்று ஒருநாள் ரயிலில் பயணிக்கிறார். அப்பயணம் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது கதை. ஸ்ருதிஹாசன், நாசர், நரேன் நடித்துள்ளனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ‘முதலில் மிஷ்கின் சார் என்னை ‘ட்ரெயின்’ படத்துக்காக ஒரு பாடலை பாட அழைத்தார். அங்கு சென்றபோது, ’ஒரு கெஸ்ட் ரோல் இருக்கிறது. நீங்கள் நடிக்க வேண்டும்’ என்றார்.
உடனே நான் சம்மதித்து நடித்தேன். அவரது இயக்கத்தில் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. உடனே நான் சம்மதம் சொன்னவுடன் அவரது முகத்தில் புன்னகை தெரிந்தது. அவர் எவ்வளவு பெரிய படைப்பாளி என்பது அனைவருக்கும் தெரியும். உலகத்தில் வெளியாகும் பல்வேறு மொழிப் படங்கள் குறித்து பல ஆச்சரியமான விஷயங்களை பேசுவார். ஆங்கிலம், ஜப்பானிய மொழிப் படங்கள் குறித்தும் நிறைய விஷயங்கள் பேசுவார். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை அன்புடன் ‘பாப்பா’ என்று சொல்வார். அவரது இயக்கத்தில் மீண்டும் நடிக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.
அவர் நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க கேட்கப்பட்டவர், பாவனா. இவர், மிஷ்கின் எழுதி இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.