புராண படத்தில் நடிக்கிறேனா: மகேஷ் பாபு விளக்கம்
ஐதராபாத்: மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் பான் வேர்ல்ட் படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் படத்தின் பெயர் ‘வாரணாசி’ என்று அறிவிக்கப்பட்டது. மேலும், படத்தின் டைட்டில் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.
காளையின் மேல் அமர்ந்து மகேஷ் பாபு வருவதுபோல் போஸ்டர் வெளியிட்டு அவரது கதாபத்திரத்தின் பெயர் ருத்ரா என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இப்பட விழாவில் மகேஷ்பாபு பேசும்போது, ‘‘இது என்னுடைய வாழ்நாள் கனவு படம். இதற்காக நான் கடுமையாக உழைப்பேன். அனைவரையும் பெருமைப்படுத்துவேன். ‘வாரணாசி’ படம் வெளியானதும் இந்தியாவை பெருமைப்பட வைப்பேன்.
என் அப்பா கிருஷ்ணா, என்னை ஒரு புராணப்படத்தில் நடிக்க வேண்டும் என அடிக்கடி சொல்லுவார். அப்போது நான் அதை கேட்கவில்லை. இன்று அவரது ஆசையை நான் நிறைவேற்றிவிட்டேன். என் வார்த்தைகளை அவர் எங்கிருந்தாலும் கேட்டுக்கொண்டிருப்பார்” என்றார்.
பிரியங்கா சோப்ரா பேசுகையில், ‘‘நீங்கள் கொடுக்கும் ஆதரவு என் உடம்புக்குள் மின்சாரம் போல் பாய்கிறது. இப்படத்தின் மூலம் திரும்பவும் இந்திய திரை உலகிற்கு வந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். பிருத்விராஜ் உண்மையில் நல்ல தைரியமானவர். மகேஷ் பாபு ஒரு லெஜன்ட். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்து கொண்டதற்கு நன்றி” என்றார்.
