நறுவீ: விமர்சனம்
குன்னூருக்கு அருகிலுள்ள நெடுங்காடு மலை கிராமத்தையொட்டிய அடர்ந்த வனப்பகுதிக்குள் ஆண்கள் நுழைந்தால், உயிருடன் திரும்பி வர மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், வனப்பகுதி நிலத்தில் விஜே பப்பு, பாடினி குமார் காதல் ஜோடி உள்பட 2 ஆண்கள், 3 பெண்கள் கொண்ட 5 பேர் ஆய்வு செய்கின்றனர். அப்போது அவர்களை சில அமானுஷ்ய விஷயங்கள் மிரட்டுகின்றன. ஆபத்து ஏற்படுத்தும் அமானுஷ்ய சக்தி எது? அதனிடம் இருந்து அவர்கள் உயிர் தப்பினார்களா என்பது மீதி கதை. டாக்டர் ஹரீஷ் அலாக், விஜே பப்பு, பாடினி குமார் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். இயக்குனர் முருகானந்தம் அப்பா வேடத்துக்கு பொருத்தமான தேர்வு.
மாதவியாக நடித்த சிறுமியின் நடிப்பு அற்புதம். மற்றும் ஜீவா ரவி, பிரவீணா, கேத்ரின் வருணா, வின்சு ரேச்சல், பிரதீப், சாரதா நந்தகோபால், மதன் எஸ்.ராஜா ஆகியோரும் யதார்த்தமாக நடித்து கவனத்தை ஈர்க்கின்றனர். இயற்கை எழிலை பதிவு செய்து, அங்குள்ள அமானுஷ்யங்களை உணர வைத்து, ஆனந்த் ராஜேந்திரன் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிவேக பாடல்களில் கவனத்தை ஈர்த்து, பின்னணி இசையில் ‘எஃஐஆர்’ அஸ்வத் மிரட்டியுள்ளார். பழங்குடியின தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்தமாக சொன்ன இயக்குனர் சுபாரக் முபாரக் பாராட்டுக்குரியவர். திரைக்கதை ஒரே இடத்தையே சுற்றுவது சோர்வை ஏற்படுத்துகிறது.