புது சாதனை படைத்த எனது அணி: அஜித் பரபரப்பு அறிக்கை
சென்னை: தனது கார் ரேஸ் அணி தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற்று வருவதால், இன்னும் சில காலம் கார் ரேஸில் அதிக கவனம் செலுத்த அஜித் குமார் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்த ஆண்டின் ரேஸிங் பயணம் ஆர்வம், பொறுமை, முன்னேற்றம் ஆகியவற்றின் பயணமாக அமைந்தது. இது வெறும் போட்டியல்ல, கற்பதற்கான பயணம். வெற்றிகள், தோல்விகள், சவால்கள் ஆகியவற்றால் இந்த பயணம் நிறைந்திருந்தது.
அதுவே எங்களை உலக மேடைகளில் நன்கு வெளிப்படுத்தி இருக்கிறது. துபாயின் வெப்பம் முதல் ஐரோப்பாவின் பனி வரை, ஒவ்வொரு போட்டியும் எங்கள் அணியை வலுப்படுத்தியது. ஆர்வமும், அடக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த பயணம் நிரூபித்தது. ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் 26 போட்டிகளில் பங்கேற்றோம். ஒரு இந்திய அணி இத்தனை போட்டிகளிலும் போட்டியிட்டது புதிய சாதனை.
இந்த பயணத்தில் தோல்விகள், தொழில்நுட்ப கோளாறுகள், பருவநிலை மாற்றங்கள் உள்பட நிறைய சவால்கள் இருந்தன. வீரர்கள், மெக்கானிக்குகள், பொறியாளர்கள் இணைந்து அனைத்தையும் வென்றனர். தொடர்ந்து சர்வதேச துறையில் இன்னும் விரிவாக பயணிக்க கவனம் செலுத்துவோம். இந்த பயணத்தில் கற்றுக்கொண்டதை அடுத்த பயணத்தில் சிறப்பாக பயன்படுத்துவோம்.