தமிழ் படங்களை தயாரிக்க இலங்கையில் புது பட நிறுவனம் துவக்கம்
கொழும்பு: இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒரு திரைப்படத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் அமைந்துள்ளன.
டிஐ, எடிட்டிங், அட்மாஸ் சவுண்ட், மிக்சிங் பிரிவியூ தியேட்டர், ஃபோலி சவுண்ட்ஸ், டப்பிங் தியேட்டர் போன்ற ஒழுங்கமைப்புகளுடன் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் நடக்கும் தொழில்நுட்பக்கூடமும் அதற்கான ஸ்டுடியோவும் அமைந்துள்ளன. இந்த வருடத்திற்கான 5 முழுநீளத் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான ஆரம்ப நிகழ்வும் நிடைபெற்றது.
இலங்கை முன்னணித் திரைக் கலைஞர்களும் இலங்கை திரைப்பட கூட்டு ஸ்தாபன தலைவர் சுடத் மஹாடிவுலுவேவா யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஒழுங்கமைப்பாளர் அனோமா ராஜகருணாயக்க போன்றோரும் வருகை தந்து சிறப்பித்தனர்.
ட்ரீம் லைன் நிறுவனத்தை சிறீஸ்கந்தராஜா தொடங்கி உள்ளார். இதன் மூலம் அவர் படங்களை தயாரிப்பார். இந்த விழாவில் லூயிஸ், அந்தோனி, மிஷன் லங்கா, சாசுவதம், திரவி போன்ற வரிசையில் திரைப்படத் தலைப்புக்களை அறிமுகப்படுத்தி இயக்குநர்கள் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.