வாய்ப்புகளை மறுக்கும் ஸ்வேதா பாசு
இந்தி, பெங்காலி, ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் மற்றும் குறும்படங்கள், டி.வி தொடர்களில் நடித்து வரும் ஸ்வேதா பாசு பிரசாத் (34), தமிழில் ‘ரா ரா’, ‘மை’, ‘சந்தமாமா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘இப்போது நான் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். எனது கேரக்டரை தேர்வு செய்வதில் முன்பைவிட அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறேன். என்னை தேடி பத்து கதைகள் வந்தால், அதில் ஒன்பது கதைகள் நன்றாக இல்லை என்றால், உடனே அதை வேண்டாம் என்று சொல்லி விடுகிறேன்.
வாய்ப்பு இல்லாமல் ஆறு மாதங்கள் வீட்டில் அமர்ந்திருந்தால் கூட பரவாயில்லை. நல்ல கதைகளுக்காக வருடம் முழுக்க காத்திருப்பது அவசியம் என்று நினைக்கிறேன். எந்த படத்தை, எந்த கேரக்டரை தேர்வு செய்தாலும், அது நான் பார்க்க விரும்பும் ஒன்றாக இருப்பது முக்கியம். பரிசோதனை முயற்சியான கதைகளும் என்னை தேடி வருகின்றன. தற்போது ரசிகர்கள் எல்லாவிதமான ஜானர் படங்களையும் பார்த்து ரசிக்கின்றனர். நடிகர்களுக்கும் விதவிதமான கேரக்டர்களில் தங்களின் திறமையை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த தருணம் என்று நினைக்கிறேன். இப்போது நான் ஒரு நேரத்தில், ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறேன்’ என்றார்.
