தொடர்ந்து 23 நிமிடம் கைதட்டல் வாங்கிய பாலஸ்தீனிய படம்
வெனிஸ்: பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல அப்பாவி காசா மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் காசா மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிந்த் ராமி இயாத் ரஜப் என்ற 5 வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டார். தற்போது இந்த சிறுமி கொலையை மையமாக வைத்து ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கவுதர் பென் ஹனியா என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் சமீபத்தில் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
அப்போது படத்தை பார்த்த அனைவரும் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டல் கொடுத்திருக்கின்றனர். இது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் கவுதர் பென் ஹனியா பேசியதாவது, ‘‘ஒரு குழந்தையின் கொலை மக்களுக்கிடையே ஒருபோதும் பிளவை ஏற்படுத்தக்கூடாது. இதைப் பற்றி பேச வேண்டிய சூழல் தற்போது வந்துவிட்டது என்பதே மிகக் கொடூரமான விஷயம். இதுபோன்ற விஷயங்கள் ஒருபோதும் நடக்கக் கூடாது. இது ஒரு மோசமான குற்றம். இந்தப் படம் ‘ஹிந்த் ரஜப்’ கொல்லப்பட்ட கதையைச் சொல்கிறது” என்றார்.