பனை: விமர்சனம்
பனை மரங்களும், பனை தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதையில், வடிவுக்கரசியின் பனை மரங்களை குத்ததைக்கு கேட்டு கிடைக்காத ஆத்திரத்தில் வில்லன் எம்.ராஜேந்திரன் எடுக்கும் விபரீத முடிவும், அதற்கு எதிராக வடிவுக்கரசியின் பேரன் ஹரீஷ் பிரபாகரனின் போராட்டமும் தான் படம். உடன்குடி மற்றும் மணப்பாடு பகுதி பனங்காட்டுக்கே சென்று வந்த உணர்வை ஏற்படுத்தும் இப்படத்தை எழுதி தயாரித்து, வில்லன் கேரக்டரில் எம்.ராஜேந்திரன் இயல்பாக நடித்துள்ளார். ஹரீஷ் பிரபாகரன், மேக்னா காதல் இளசுகளுக்கு சுவாரஸ்யம். வடிவுக்கரசி, அனுபமா குமார், கஞ்சா கருப்பு, ரேஷ்மா பசுபுலேட்டி, இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர் ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். சிவகுமார் ரங்கசாமியின் ஒளிப்பதிவு, பனங்காட்டின் வளமையை காட்டியிருக்கிறது. மீரா லால் பின்னணி பலம். வைரமுத்து எழுதிய ‘பனைமரம் பனைமரம்... பணம் காய்க்கும் பனைமரம்’ என்ற பாடல் உள்பட இதர பாடல்களும் கருத்தாழம் கொண்டவை. ஆதி பி.ஆறுமுகம் இயக்கியுள்ளார். ஊரில் அராஜகம் செய்யும் பெரும்புள்ளியை, வழக்கம்போல் போலீசார் கண்டுகொள்ளாதது நெருடுகிறது.