பூங்கா: விமர்சனம்
கவுசிக் உள்பட 4 பேர், சென்னையிலுள்ள ஒரு பூங்காவில் எதிர்பாராமல் சந்தித்த பிறகு நெருங்கிய நண்பர்களாக மாறுகின்றனர். அவர்களில் ஒருவர், தான் பணியாற்றும் நிறுவனத்தில் டீம் லீடர் ஆகிறார். இந்நிலையில், அவருடன் கவுசிக் மோதுகிறார். இதனால் நட்பு முறிகிறது. பூங்காவுக்கு தனது காதலியுடன் வரும் இன்னொருவரை கவுசிக் அடித்துவிடுகிறார். தொடர்ந்து அவர்கள் மீது கவுசிக் கோபப்படுவது ஏன்? நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததா என்பது மீதி கதை. காதல், மோதல், பாடல் என்று கவுசிக், தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். அவரது காதலி ஆரா சிறப்பாக நடித்துள்ளார். பிரணா, சசி தயா இயல்பாக நடித்துள்ளனர். ஒரு காட்சியில் கோவிந்தராஜ் காமெடி செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஆர்.ஹெச்.அசோக்கின் ஒளிப்பதிவும், அஹமது விக்கியின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் கதையை நகர்த்த உதவுகின்றன. பூங்கா என்பது பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சிக்கான தளம் மட்டுமல்ல. அது நல்ல நண்பர்களை உருவாக்கும் இடம் என்பதை சொல்லியிருக்கிறார், எழுதி இயக்கி தயாரித்த கே.பி.தனசேகர். மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
