2வது பாகத்தால் அதிர்ச்சி அடைந்த ஜான்வி
கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் திரைக்கு வந்த பான் இந்தியா படம், ‘தேவரா’. இதில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடித்ததன் மூலமாக தென்னிந்திய படவுலகில் அறிமுகமானார், மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முதல் பாகம் கொடுத்த அதிர்ச்சியின் காரணமாக 2வது பாகத்தை உருவாக்க முடியாமல் தவித்த படக்குழுவினர், அதுபற்றிய அறிவிப்பை வெளியிட தயக்கம் காட்டி வருகின்றனர். முதலில் இப்படத்தை 2 பாகங்களாக உருவாக்க இயக்குனர் திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
ஆனால், முதல் பாகம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 2வது பாகத்துக்கான படப்பிடிப்பை தொடங்குவதற்கான எந்தவொரு பணியும் இதுவரை தொடங்கவில்லை. இந்நிலையில், ‘தேவரா’ படத்தின் 2வது பாகம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகர்களை மட்டுமின்றி, ஜான்வி கபூரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாலிவுட்டில் இருந்து வந்துள்ள ஜான்வி கபூரும், சைஃப் அலிகானும் ‘தேவரா’ படத்தின் மூலம் தென்னிந்திய படவுலகில் பலமாக காலூன்ற நினைத்திருந்த வேளையில், 2வது பாகம் கைவிடப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் அவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.