பவன் கல்யாண் ஏற்பாடா? அரசு வாகனத்தில் பயணித்த நிதி அகர்வால்: வெடித்தது சர்ச்சை!
ஐதராபாத்: நடிகை நிதி அகர்வால் அரசு வாகனத்தில் சினிமா நிகழ்ச்சிக்கு சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான நிலையில் இது குறித்து நிதி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில், ஆந்திர பிரதேச மாநிலம் பீமாவரம் நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் நடிகை நிதி அகர்வால் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சிக்கு அவர் ஆந்திர மாநிலத்தின் அரசு வாகனத்தில் வந்திருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அரசு வாகனங்கள் எவ்வாறு சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு நடிகை நிதி அகர்வால் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நான் வந்த வாகனம் விழா ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை, வாகனத்தைப் பயன்படுத்துமாறு எந்த அரசு அதிகாரிகளும் தன்னிடம் கூறவில்லை” என தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 24ம் தேதி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்தார். சுமார் ஐந்து வருடங்களுக்கு பிறகு வெளியான நிதி அகர்வால் படம் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது அவர் சென்ற அரசு வாகனம் பவன் கல்யாண் ஏற்பாடு செய்ததா என ஒரு சாரார் கேள்வி எழுப்பி வருகின்றனர்.