பிரபாஸ் திருமணம்: உறவினர் புது தகவல்
தெலுங்கு முன்னணி நடிகராக இருந்து பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ள பிரபாசுக்கு 45 வயது ஆகிறது. இன்னமும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அவரையும், அனுஷ்காவையும் இணைத்து கிசுகிசு வந்தாலும், அவர்களின் உறவு என்னவோ நீறுபூத்த நெருப்பு போல் இருக்கிறது. சமீபகாலமாக அவர் திருமணம் குறித்து எதுவும் பேசுவது இல்லை. அனுஷ்காவுக்கு 44 வயது ஆகிறது. அவரும் தனது திருமணம் குறித்து பேசாமல் இருக்கிறார். பிரபாஸ் பற்றி கேட்டால், ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே’ என்று சொல்லிவிடுகிறார். இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரின் மகளுடன் பிரபாஸுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும், விரைவில் அவர்களின் திருமணம் நடக்கும் என்றும் தகவல்கள் வெளியானது.
திருமண ஏற்பாடுகளை பிரபாஸின் உறவினர் சியாமளா தேவி ரகசியமாக செய்து வருவதாக செய்தி பரவியது. பிறகு அது வதந்தி என்று தெரிந்தது. தற்போது பிரபாஸின் திருமணம் குறித்து சியாமளா தேவி பேசியுள்ளார். ஆந்திராவில் கிழக்கு கோதாவரி நகரில் அமைந்துள்ள திரக்சாரமம் கிராமத்தில் இருக்கும் பீமலிங்கேஸ்வர சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்த அவர், பிரபாஸின் திருமணம் குறித்து நிருபர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ‘பிரபாஸ் திருமணம் எப்போது என்று அனைவரும் காத்திருக்கின்றனர். எங்கள் நிலையும் அதுவேதான். பிரபாஸுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறோம்.
இந்த ஆண்டே திருமணம் நடக்குமா என்று கேட்டால், அதை உறுதியாக சொல்ல முடியாது. சிவனின் அருள் இல்லாமல் பிரபாஸுக்கு திருமணம் நடக்காது. சிவன் எப்போது அருள் புரிகிறாரோ அப்போது திருமணம் நடக்கும். அந்த பெண் சினிமா துறையை சேர்ந்தவரா? வேறு துறையை சேர்ந்தவரா என்பது இறைவனின் சித்தம். ஆனால், நிச்சயமாக பிரபாஸின் திருமணம் விரைவில் நடக்கும்’ என்றார்.