கர்ப்பிணிகளுக்கு உதவ ஸ்வேதா நடவடிக்கை
மலையாள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) என்ற அமைப்பின் முதல் பெண் தலைவராக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘அப்போது கோயம்புத்தூரில் நடந்த அழகி போட்டியில் பங்கேற்க கடிதம் வந்தது. என் தந்தையிடம் கேட்காமல் விண்ணப்பித்து விட்டேன். இதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அந்த போட்டியில் நான் கலந்துகொள்வதற்காக கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றார்.
அதில் நான் ரன்னர்-அப் ஆனேன். பிறகு எனது போட்டோக்கள் மலையாள பத்திரிகைகளில் வெளியானது. தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்றேன். 1994ல் நடந்த அழகி போட்டியில் ஐஸ்வர்யா ராயுடன் பங்கேற்றேன். அப்போது சுஷ்மிதா சென் கிரீடத்தை வென்றார். நான் சினிமாவில் பிசியாக நடித்து வரும்போது கர்ப்பமாக இருந்தேன். அந்த நேரத்திலும் கூட நான் 4 படங்களில் நடித்தேன். தினமும் விடியற்காலையில் எழுந்து படப்பிடிப்புக்கு செல்வது கடினமாக இருந்தது.
இதுபற்றி அந்தந்த பட இயக்குனர்களிடம் சொன்னேன். அவர்கள் புரிந்துகொண்டனர். ஆனால், இதுபோன்ற விஷயங்களை சிலர் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். நடிகர் சங்க தலைவராக நான் பதவியேற்ற முதல் நாளே நடிகைகளிடம், அவர்களுக்கு எந்த பிரச்னை இருந்தாலும் தைரியமாக சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். திரைத்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இங்கு பணியாற்றும் தாய்மார்களுக்கு படப்பிடிப்பு தளங்களில் வேலைக்கான நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்றார்.