சுமதி ஆகிறார் பிரியங்கா சோப்ரா
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம், ‘கல்கி 2898 ஏடி’. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்தார். இப்படம் 1,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதில் சுமதி என்ற முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் தீபிகா படுகோன் நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அதே கேரக்டரில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தில் இருந்து விலகுவதாக தீபிகா படுகோன் அறிவித்தார். இதனால், சுமதி கேரக்டரில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது.
பிறகு அந்த கேரக்டரில் சாய் பல்லவி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ என்ற படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்கும் பிரியங்கா சோப்ராவை சுமதி வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பேச்சுவார்த்தையை வைஜெயந்தி பிலிம்ஸ் நடத்தி வருகிறது. ‘வாரணாசி’ படத்துக்கு இதுவரை இந்திய அளவில் எந்த முன்னணி நடிகையும் வாங்காத சம்பளத்தை வாங்கியுள்ள பிரியங்கா சோப்ரா, ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2ம் பாகத்துக்கும் அதே அளவு சம்பளத்தை கறாராக கேட்பதாக கூறப்படுகிறது.
