சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா மோகன் பட இயக்குனர்
இன்று நெட்பிளிக்சில் வெளியாகும் படம், ‘ஓஜி’. தியேட்டரில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் தனய்யா, இயக்குனர் சுஜித் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை தனது சொந்த பணத்திலேயே இயக்குனர் முடித்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த முரண்பாடால் நானி படத்தின் தயாரிப்பு பொறுப்பில் இருந்து தனய்யா விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியாகி வைரலானது. இதற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டாலும், ஒரு படத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை கொண்டு செல்ல என்னென்ன தேவை என்பதை மிகச்சிலர் மட்டுமே உண்மையில் புரிந்துகொள்கின்றனர்.
எனது தயாரிப்பாளரும், படக்குழுவினரும் ‘ஓஜி’ படத்துக்காக காட்டிய நம்பிக்கையையும், வலிமையையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதுதான் இன்று இப்படத்துக்கு அதன் பலத்தை கொடுக்கிறது. இது யாருக்கும் எளிதாக இருந்தது இல்லை. ஒவ்வொரு முயற்சியும் அர்ப்பணிப்புடன் இருந்து வந்தது. அதன் செயல்முறையை மதிக்க வேண்டும். தனய்யாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில் பவன் கல்யாண், பிரியங்கா ேமாகன், ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ்ராஜ், அர்ஜூன் தாஸ் நடித்திருந்தனர்.