தண்டகாரண்யம் விமர்சனம்...
கிருஷ்ணகிரி வனப்பகுதியில் தனது மனைவி ரித்விகா, தம்பி கலையரசன் மற்றும் பெற்றோருடன் வசிக்கும் தினேஷ், நக்சலைட்டுகளுக்கு மறுவாழ்வு தர ஒன்றிய அரசு உருவாக்கிய சிறப்பு பாதுகாப்பு படையில் கலையரசனை தினேஷ் சேர்க்கிறார். ஜார்க்கண்ட் மாநில பயிற்சி மையத்தில் பல துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார் கலையரசன். அப்பாவிகள் மீது பழிசுமத்தி, அங்குள்ள அரசு அதிகாரிகள் வஞ்சிக்கின்றனர்.
அந்த சூழ்ச்சியில் இருந்து கலையரசனும், மற்றவர்களும் தப்பித்தார்களா என்பது நெஞ்சை பதற வைக்கும் மீதி கதை.
பழங்குடியினரின் வலிகளை பிரதிபலிக்கும் கேரக்டரில் தினேஷ் வாழ்ந்துள்ளார். பயிற்சி மையத்தில் கலையரசன் அனுபவிக்கும் சித்ரவதைகள் கண்கலங்க வைக்கிறது. வில்லனாக வந்து, இறுதிக்காட்சியில் ஷபீர் கல்லரக்கல் உருக வைக்கிறார். ரித்விகா, பாலசரவணன், வின்சு ரேச்சல் சாம், அருள்தாஸ், முத்துக்குமார், யுவன் மயில்சாமி, சங்ககிரி மாணிக்கம் போன்றோரும் இயல்பான நடிப்பில் அசத்தியுள்ளனர்.
அடர்ந்த வனத்தையும், பழங்குடியினரின் வாழ்க்கையையும், பயிற்சி மைய கொடூரத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது, பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு. ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களும், பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இயக்குனர் அதியன் ஆதிரையின் துணிச்சலுக்கு பாராட்டு. உண்மை சம்பவத்தை சொன்னது ஓ.கே என்றாலும், தினேஷின் திடீர் ஹீரோயிசம் சற்று நெருடுகிறது.